சொற்குவைத் திட்டம்

சொற்களே மொழிக்கு அடிப்படை. சொற்களைப் பாதுகாத்தால்தான் மொழியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முடியும். சொற்கள் பெருகப் பெருக மொழியும் வளர்ந்து உயர்வு பெறும். காலந்தோறும் மொழியில் சில சொற்கள் பொருள் மாறுபாடு அடையும்; சில சொற்கள் வழக்கொழியும்; சில சொற்கள் புதிதாக உருவாகும். இவை அனைத்தையும் தொகுத்துப் பதிவு செய்து அகரமுதலி வடிவில் வெளியிடுவதே மொழி வளர்ச்சிக்கான ஆக்கப் பணியாக அமையும்.

அந்த வகையில், புலமையாளர்கள், பொதுமக்கள், ஆய்வறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்படும் வகையில், தமிழில் சொற்பிறப்பியல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசு விரும்பியது.

இதனை நடைமுறைப்படுத்த தனி இயக்ககம் இருந்தால்தான் பணி சிறப்பாக அமையும் என்று எண்ணிய தமிழ்நாடு அரசு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் என்னும் துறைத்தலைமை அலுவலகத்தைத் தோற்றுவித்தது.

உலக மொழிகளில் தொன்மைமிக்கதும், இலக்கணச் செறிவுடையதும், பல்வேறு துறைகளிலும் இலக்கிய வளம் கொண்டதும், மிக விரைவாக வளர்ந்து வரும் அனைத்து அறிவியல் துறைகளுக்குமான கலைச்சொற்களைத் தன் சொல்வளத்திலிருந்தே உருவாக்கிக்கொள்ளும் வல்லமை வாய்ந்ததுமான தமிழ்மொழியில், சொல்லின் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுவதற்கு உரிய வழிகாட்டுதல் தேவையாகும்.

தமிழ்மொழியின் ஒவ்வொரு சொல்லமைப்பையும் அறிந்து சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றலைப் படைப்பாளர்களும், கல்வியாளர்களும் பெற வேண்டுமெனில், தமிழின் வேர்மூலங்களை வெளிப்படுத்தும் சொற்பிறப்பியல் அகராதி அவர்களுக்கு மிகவும் இன்றியமையாதவை.

அறிவியல் பெரிதும் வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலத்திற்கேற்பக் கலைச்சொற்களை உருவாக்கும் திறன் பெற்ற மொழி மட்டுமே வாழும்; வளர்ச்சி பெறும். அவ்வாறு ஒரு மொழியின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் துணை செய்யும் முதன்மையான பணியை அகரமுதலி இயக்ககம் செயற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்மொழியின் அனைத்துச் சொற்களையும் தொகுத்து, அச்சொற்களுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் பொருள்விளக்கம் அளித்து, அச்சொற்கள் தோன்றி வளர்ந்த வேர்ச்சொல் விளக்கத்தையும் வழங்கி, அரிய சொற்களுக்குப் படவிளக்கத்துடன் கூடிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலிகளை உருவாக்கி அச்சிட்டு நூல்களாக வெளியிட்டுள்ளது; இணையத்திலும் பதிவேற்றம் செய்துள்ளது.

தமிழ்மொழிக்குப் பெருமை சேர்ப்பது அதன் சொல்வளமே ஆகும். இன்றைய கல்விப்புலத்தில் உள்ள 600க்கும் மேற்பட்ட துறைகளில் புழங்கும் கலைச்சொற்களை யெல்லாம் திரட்டி அவற்றிற்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்களை வடிவமைத்து இணைய தளத்தின் பொதுவெளியில் வெளியிடுவதும் இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அகராதிகளில் இடம் பெற்றுள்ள அனைத்துச் சொற்களையும் ஒன்றுதிரட்டி; அவற்றுள், வந்தசொல்லே மீளவும் வராதவகையில் (deduplication) நிரல்படுத்தி தமிழின் சொல்வளத்தை உலகறியச் செய்வதுமே ‘சொற்குவைத்’ திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இத்திட்டத்தின்கீழ் தொடங்கப்பெற்றுள்ள சொற்குவை.காம் (sorkuvai.com) என்ற இணையதளத்தின் வாயிலாக தமிழ்க் கலைச்சொல் தொடர்பான ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. விரைவில் தொடங்கப்படவுள்ள கட்டணமில்லாத் தொலைபேசி வாயிலாகவும் தமிழ்க் கலைச்சொல் தொடர்பான ஐயங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். இச்சொற்குவைத் திட்டத்தை உலகெங்கும் உள்ள அறிஞர் பெருமக்களும், மொழியியல் ஆய்வாளர்களும் பயன்படுத்துவதன் மூலம் ஐக்கிய நாடுகளின் அமைப்பு (யுனெஸ்கோ) வெளியிட்டுள்ள மொழிவரிசைப் பட்டியலில் 14-ஆம் இடத்திலுள்ள தமிழ்மொழி 10-ஆம் இடத்திற்கு முன்னேற்றம் காண்பதற்கான வழிவகை அமையும் என்று கருதப்படுகிறது.

‘சொற்குவைத்’ திட்டத்திற்கெனத் தனி வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் உருவாக்கித்தரும் பல்வேறு துறைகளைச் சார்ந்த புதிய தமிழ்க் கலைச்சொற்களை இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அச்சொற்களை ‘சொற்குவை’ வல்லுநர் குழு ஆய்வு செய்து ஏற்பிசைவு வழங்கிய பின் பதிவேற்றம் செய்யப்பட்டு, பொதுவெளியில் பயன்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளன.

சொற்குவையின் முதன்மை நோக்கங்கள்
  • தமிழ்மொழியின் சொல்வளத்தைக் காத்தல்

  • தமிழ் மொழியின் சொல்வளத்தைப் பெருக்குதல்

  • தமிழ்மொழியில் பிறமொழிக் கலப்பைத் தவிர்க்கத் துணை நிற்றல்