சொற்குவை
சொற்குவை சொற்குவை சொற்குவை சொற்குவை சொற்குவை
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம்
இயக்ககத் தோற்றம் - வரலாறு

இந்திய மொழிகளில் தமிழ்மொழியில்தான் முதன்முதலில் அகராதி உருவாக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகம் 1936-இல் தமிழில் பேரகராதியை உருவாக்கியது.

ஒரு காலத்தில் இந்திய மொழிகள் அனைத்தும் சமற்கிருதத்தை மூலமாகக் கொண்டு அதிலிருந்துதான் உருவாயின என்று கூறப்பட்டது. இராபர்ட் கால்டுவெல் என்ற மதம் பரப்புநர் வந்தபின்தான் சமற்கிருதத்திற்குத் தொடர்பே இல்லாத சில மொழிகள் ஒரு குடும்பமாக இருப்பதாகவும் அவை ஒரு மொழிக் குடும்பத்திற்குள் அடங்கும் என்றும் ஆராய்ந்து அவற்றிற்கான ஒப்பியல் இலக்கணத்தையும் உருவாக்கினார். அவர் கூறிய மொழிக்குடும்பமே தமிழை முதன்மையாகக் கொண்ட திராவிட மொழிக்குடும்பம். திராவிட மொழிக்குடும்பத்தில் மிகப் பழைமையான மொழியும், தொன்மையான மொழியும் தமிழ் ஆகும்.

சமற்கிருதத்தின் துணையில்லாமல் தமிழ் இயங்கக்கூடியது. மேலும் தமிழ்மொழியின் சொற்களுக்கான வேர்மூலங்களும் தமிழாகவே உள்ளன.

எனவே தமிழ் எந்த மொழியையும் சாராத, தனித்தியங்கவல்ல மொழி என்று நிறுவுவதற்குத் தமிழ்ச்சொற்களின் சொற்பிறப்பியலைத் தொகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஞானப்பிரகாசர், மாகறல் கார்த்திகேயனார் போன்றவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முழுவதுமாக அப்பணியைச் செய்யவில்லை.

தேவநேயப் பாவாணர் சொற்பிறப்பியல் தொடர்பாக வேர்ச்சொற்கட்டுரைகள், முதல் தாய்மொழி போன்ற ஆய்வு நூல்களை வெளியிட்டார். அனைத்துத் தமிழ்மொழிச் சொற்களுக்கும் சொற்பிறப்பியல் கண்டுபிடிப்பதற்காக ஒரு துறையையே உருவாக்கித்தர வேண்டுமென்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார். அப்போது தமிழ்ப்பணி ஆற்றிக்கொண்டிருந்த அறிஞர் பெருமக்களும் ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணரின் கருத்தையே வழிமொழிந்தார்கள்.

அக்கோரிக்கையைக் கனிவாக ஏற்றுக்கொண்ட அப்போதைய முதலமைச்சர் ‘முத்தமிழ் அறிஞர்’ டாக்டர் கலைஞர் அவர்கள் எக்காலத்திலும் தனித்து இயங்கும் வகையில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தைத் தோற்றுவித்தார்.

சொற்களே மொழிக்கு அடிப்படை. சொற்களைப் பாதுகாத்தால்தான் மொழியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முடியும். சொற்கள் பெருகப் பெருக மொழியும் வளர்ந்து உயர்வு பெறும். காலந்தோறும் மொழியில் சில சொற்கள் பொருள் மாறுபாடு அடையும்; சில சொற்கள் வழக்கொழியும்; சில சொற்கள் புதிதாக உருவாகும். இவை அனைத்தையும் தொகுத்துப் பதிவு செய்து அகரமுதலி வடிவில் வெளியிடுவதே மொழி வளர்ச்சிக்கான ஆக்கப் பணியாக அமையும்.

அந்தவகையில் புலமையாளர்கள், பொதுமக்கள், ஆய்வறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்படும் வகையில், தமிழில் சொற்பிறப்பியல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட வேண்டுமென்று அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் விரும்பினார்.

இதனை நடைமுறைப்படுத்த தனி இயக்ககம் இருந்தால்தான் பணி சிறப்பாக அமையும் என்று எண்ணிய அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் என்னும் துறைத்தலைமை அலுவலகத்தை 1974-ஆம் ஆண்டு தோற்றுவித்தார்.

உலக மொழிகளில் தொன்மைமிக்கதும், இலக்கணச் செறிவுடையதும், பல்வேறு துறைகளிலும் இலக்கியவளம் கொண்டதும், மிக விரைவாக வளர்ந்து வரும் அனைத்து அறிவியல் துறைகளுக்குமான கலைச்சொற்களைத் தன் சொல்வளத்திலிருந்தே உருவாக்கிக்கொள்ளும் வல்லமை வாய்ந்ததுமான தமிழ்மொழியில், சொல்லின் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுவதற்கு உரிய வழிகாட்டுதல் தேவையாகும்.

தமிழ்மொழியின் ஒவ்வொரு சொல்லமைப்பையும் அறிந்து சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றலைப் படைப்பாளர்களும், கல்வியாளர்களும் பெற வேண்டுமெனில், தமிழின் வேர்மூலங்களை வெளிப்படுத்தும் சொற்பிறப்பியல் அகராதி அவர்களுக்கு மிகவும் இன்றியமையாதவை.

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழிக்கு உருவாக்கிய பேரகராதிக்குப் பின், தமிழ்நாடு அரசே இந்தப் பொறுப்பை ஏற்றுத் தமிழ்ப் பேரகராதிக்கென ஒரு துறையைச் ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம்’ என்ற பெயரில் 1974-இல் உருவாக்கியது.

தமிழின் சொற்களுக்குச் சொற்பிறப்பியலுடன் கலந்த பேரகரமுதலியை உருவாக்கும்பணி 1974-இல் தொடங்கி 2011-இல், 38 ஆண்டுகளில் 13,270 பக்கங்களில் 31 தொகுதிகளை உருவாக்கியபோது நிறைவுபெற்றது.

இவ்வியக்ககம் 31 தொகுதிகளையும் சுருக்கி 1000 பக்க அளவில் சுருக்கப்பதிப்பு ஒன்றை ஒரே தொகுதியாகவும், 500 பக்க அளவில் வினைச்சொல் அகரமுதலி ஒன்றை ஒரே தொகுதியாகவும் 2016-இல் உருவாக்கியது. 1300 மூலமான சொற்களை எடுத்துக்கொண்டு அதற்கான வேர்ச்சொற்களை மட்டும் எடுத்து ‘வேர்ச்சொல் சுவடி’ என்ற நூலையும், நல்ல தமிழ்ச்சொற்களை 1-ஆம் வகுப்பிலிருந்து 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் ‘நற்றமிழ் அறிவோம்’ என்ற நூலையும் வெளியிட்டது.

சொற்பிறப்பியல் அகரமுதலி உருவாக்கத்திற்கென்றே தொடங்கப்பட்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் அதன் பணியை நிறைவு செய்தவுடன் தொடர்ந்து பல்வேறு அகரமுதலிகளை உருவாக்குவதுடன், கலைச்சொற்கள் உருவாக்கும் பணியையும் மேற்கொண்டுவருகிறது.

மிகக் குறைந்த பணியாளர்களைக் கொண்ட இவ்வியக்ககம் தன் ஆற்றலுக்கு மேல் ஒரு மாதத்திற்கு 1000 கலைச்சொற்களை உருவாக்கும் இலக்குடன் செயலாற்றிவருகிறது.

அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றக் காலத்தில் அனைத்துத் துறைகளுக்குமான கலைச்சொற்களைத் தமிழில் உருவாக்கத் தேவையுள்ளது. அந்த வகையில் உலககெங்கணும் பரவியுள்ள தமிழர்கள் அந்தந்த நாட்டிலும் பல துறைகளிலும் அறிஞர்களாகப் பணியாற்றுகின்றனர். அவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இயக்ககத்தில் உருவாக்கப்பட்ட சொற்களைச் "சொல் வைப்பகத்தில்" சேகரித்து வைத்துள்ளது. அதற்குச் ‘சொற்குவை’ என்று பெயரிடப் பெற்றது.

அதற்கென ஓர் வலைத்தளம் உருவாக்கப்பட்டு அது ‘சொற்குவை.காம்’ (www.sorkuvai.com) என்ற பெயரில் இயங்குகிறது. இந்த வலைத்தளம்வழி உலகத்தமிழர்கள் இந்தச் சொற்களை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொதுவாக, ஒவ்வொரு மொழியிலும் கல்வி நிறுவனங்களில் மட்டுமே அகராதிகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் தமிழ்நாடு அரசு அகரமுதலிக்கென்றே ஒரு துறையைத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் அகரமுதலித்துறையை ஓர் அரசே உருவாக்கி இயக்கி வருவது தமிழ்நாடு அரசு மட்டுமே எனக் கருதப்படுகிறது.

தமிழ்நாட்டு அரசின் கீழ் இயங்கும் மற்ற துறை இயக்ககங்களைப் போலல்லாமல் இவ்வியக்ககம் சொல்லாராய்ச்சிப் பணிகளையே முகாமையாகச் செய்கிறது. மொழி வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் இவ்வியக்ககமே ஆணிவேராகத் திகழ்கிறது. ஒரு மொழியின் பாதுகாப்பிற்குத் தனி இயக்ககம் கட்டாயம் தேவை என்றும் அவ்வியக்ககம் அரசின் நேரிடை ஆளுகைக்குக்கீழ் தனித்து இயங்கக்கூடியதாக இருந்தால் மட்டுமே மொழிக்கான ஆக்கப்பணிகளை இடையறாமல் செய்ய முடியும் என்பதற்கும் இவ்வியக்ககமே சான்றாக விளங்குகிறது.

சொற்குவைத் திட்டம்

அறிவியல் பெரிதும் வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலத்திற்கேற்பக் கலைச்சொற்களை உருவாக்கும் திறன் பெற்ற மொழி மட்டுமே வாழும்; வளர்ச்சி பெறும். அவ்வாறு ஒரு மொழியின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் துணை செய்யும் முதன்மையான பணியை அகரமுதலி இயக்ககம் செயற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்மொழியின் அனைத்துச் சொற்களையும் தொகுத்து, அச்சொற்களுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் பொருள்விளக்கம் அளித்து, அச்சொற்கள் தோன்றி வளர்ந்த வேர்ச்சொல் விளக்கத்தையும் வழங்கி, அரிய சொற்களுக்குப் படவிளக்கத்துடன் கூடிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலிகளை உருவாக்கி அச்சிட்டு நூல்களாக வெளியிட்டுள்ளது; இணையத்திலும் பதிவேற்றம் செய்துள்ளது.

தமிழ்மொழிக்குப் பெருமை சேர்ப்பது அதன் சொல்வளமே ஆகும். இன்றைய கல்விப்புலத்தில் உள்ள 600க்கும் மேற்பட்ட துறைகளில் புழங்கும் கலைச்சொற்களையெல்லாம் திரட்டி அவற்றிற்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்களை வடிவமைத்து இணையம்வழியே பொதுவெளியில் வெளியிடுவதும், இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அகராதிகளில் இடம் பெற்றுள்ள அனைத்துச் சொற்களையும் ஒன்றுதிரட்டி, அவற்றுள் வந்தசொல்லே மீளவும் வராதவகையில் (deduplication) நிரல்படுத்தி, தமிழின் சொல்வளத்தை உலகறியச் செய்வதுமே ‘சொற்குவைத்’ திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இத்திட்டத்தின்கீழ் தொடங்கப்பெற்றுள்ள 14469 என்ற எண்ணிலமைந்த கட்டணமில்லா அழை மையத்தினைத் தொடர்புகொண்டு தமிழ்ச்சொற்கள் தொடர்பான ஐயங்களையும், தமிழுக்கு நிகரான ஆங்கிலச்சொற்களையும், ஆங்கிலத்திற்கு நிகரான தமிழ்ச்சொற்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த விரைவில் இந்த அழை மையத்தினை 24 மணி நேரமும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இச்சொற்குவைத் திட்டத்தை உலகெங்கும் உள்ள அறிஞர் பெருமக்களும், மொழியியல் ஆய்வாளர்களும் பயன்படுத்துதல் மற்றும் சொற்கள் வழங்குவதன் மூலம் ஐக்கிய நாடுகளின் அமைப்பு (யுனெஸ்கோ) வெளியிட்டுள்ள மொழிவரிசைப் பட்டியலில் தமிழ்மொழி முதல் வரிசையில் முன்னேற்றம் காண்பதற்கான வழிவகை அமையும் என்று கருதப்படுகிறது.

‘சொற்குவைத்’ திட்டத்திற்கெனத் தனி வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் உருவாக்கித்தரும் பல்வேறு துறைகளைச் சார்ந்த புதிய தமிழ்க் கலைச்சொற்களை வல்லுநர்க் குழு ஆய்வு செய்து ஏற்பிசைவு வழங்கிய பின் சொற்குவை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பொதுவெளியில் பயன்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளன.

சொற்கள் ஏட்டளவிலும், இணையத்திலும் சேகரிக்கப்படுவது மட்டும் போதாது, அச்சொற்கள் பொதுமக்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்று பல நிலையிலும் சென்று சேர வேண்டுமென்பதற்காகக் கல்லூரிகள்தோறும் சொல்லாக்கப் பயிலரங்கம், விழிப்புணர்வுக்கூட்டம் நடத்தப்படுகின்றன. இவ்வியக்ககம் தன்னார்வத்துடன் அரசுக்கு எந்தவித செலவினத்தையும் ஏற்படுத்தாமல் வணிக நிறுவனங்களுடன் இணைந்து பணியாளர்கள் வழியாக வாடிக்கையாளர்களுக்குத் தூயதமிழ்ச் சொற்களைப் பரவலாக்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்கள் வரை தூய தமிழில் பேச விழிப்புணர்வுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வீடுகளில் இருக்கும்போதும் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தாருடன் தாய்மொழியில் பேச வேண்டும் என்பதை அறிவுறுத்தி, அவர்களுக்குத் தேவையான கலைச்சொற்களை இவ்வியக்ககம் வழங்கி வருகிறது. இல்லத்தரசிகள் பங்கு பெறும் இல்லந்தோறும் இனிய தமிழில் பேசுவோம் என்ற இந்த நிகழ்வு உலகம் முழுவதிலும் வாழும் மகளிரையும், பெற்றோரையும் கவர்ந்து வருகிறது. ‘செந்தமிழ்த் திருத்தேர்’ என்ற கல்லூரி இளைஞர்களின் ஒருங்கிணைவுக் குழுவுடன் இணைந்து இணையம் வழியாக அடிப்படை இலக்கணம், கணினிவழித் தமிழ்ப்பயிற்சி போன்ற நிகழ்வுகளையும் இவ்வியக்ககம் செய்துவருகிறது. மேற்கண்ட புறநிலை நிகழ்வுகளின் வாயிலாக ஆயிரக்கணக்கான தமிழ்ப்பற்றாளர்கள் இவ்வியக்ககத்துடன் இணைப்பில் இருக்கிறார்கள்.

சொற்குவையின் முதன்மை நோக்கங்கள் :

1. தமிழ்மொழியின் சொல்வளத்தைக் காத்தல்

2. தமிழ் மொழியின் சொல்வளத்தைப் பெருக்குதல்

3. தமிழ்மொழியில் பிறமொழிக் கலப்பைத் தவிர்க்கத் துணைநிற்றல்

தமிழ்மொழி வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் தமிழ்நாடு அரசு செயற்படுத்திவரும் திட்டங்களை உலகிலுள்ள அனைத்துத் தர மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில் இணையம் வழியாகவும், விழிப்புணர்வுக் கூட்டங்கள் வழியாகவும் பொதுவெளிக்கு எடுத்துச் செல்வது.

அகராதிகள் ஏன்?

‘அகரம்’ என்பது ‘அ’ என்ற எழுத்தையும், ‘ஆதி’ என்பது ‘முதல்’ என்ற பொருளையும் குறிக்கும். எனவே தமிழில் ‘அ’ என்னும் எழுத்தை முதலாகக் கொண்டு சொற்களை வரிசைப்படுத்திப் பொருள் சொல்லும் நூல் (அகரம் + ஆதி = அகராதி)அகராதி என்று அழைக்கப்படுகின்றது. அகராதியானது அகரமுதலி, அகரவரிசை என்ற வேறுபெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. சொற்களின் களஞ்சியமாகவும், மொழியைக் காக்கும் கூறாகவும் அகராதி விளங்குகிறது.

நிகண்டுகளும் அகராதிகளும்

மொழியில் ஒவ்வொரு காலத்திலும் புதிய சொற்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். எனவே, மொழியில் உள்ள சொற்களுக்குப் பொருள் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை எல்லாக் காலங்களிலும் உண்டு. தமிழில் கிடைத்துள்ள, மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட நூலான தொல்காப்பியத்திலேயே அகராதிக் கூறுகள் அமைந்திருப்பதை நாம் அறிய முடிகிறது. சொல்லதிகாரத்தின் உரியியலில் 120 சொற்களுக்கும், இடையியலில் சில சொற்களுக்கும், பொருளதிகாரத்தின் மரபியலில் சில சொற்களுக்கும் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளன.

தொல்காப்பியம் என்னும் தொடக்கப்புள்ளியைத் தொடர்ந்து சொல்லுக்குப் பொருள் சொல்ல செய்யுள் வடிவிலான நிகண்டுகள் படைக்கப்பட்டன. சேந்தன் திவாகரம் எனப்படும் திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, கயாதர நிகண்டு, உரிச்சொல் நிகண்டு முதலிய பல நிகண்டுகள் உருவாக்கப்பட்டன. செய்யுள் வடிவிலான நிகண்டுகள் மனப்பாடம் செய்துகொள்ளும் வகையில் அமைந்திருந்தன. அக்காலத்தில் நிகண்டுகளை முழுமையாகக் கற்றவர்களே பெரும்பண்டிதர்களாக மதிக்கப்பட்டனர். இதனை, "நிகண்டு கல்லாதவன் மண்டு" என்ற பழமொழியினால் அறியலாம்.

அகராதி - பெயர் அறிமுகம்

நிகண்டுகள் செய்யுள் வடிவில் பொருள் சொல்லிவந்த நிலையில் சொற்களை அகரவரிசையில் அமைத்துப் பொருள் சொல்லும் வகையில் 1594 ஆம் ஆண்டு சிதம்பர இரேவண சித்தர் அகராதி நிகண்டை இயற்றினார். இவரே ‘அகராதி’ என்ற பெயரையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அயல்நாட்டினரின் அகராதிக்கொடை

நம் நாட்டிற்கு மதம் பரப்ப வந்த ஐரோப்பிய மதப்பரப்புநர்கள் மொழிப்புரிதல், கருத்துப் பரிமாற்றம் ஆகிய தேவைகளைக் கருத்தில்கொண்டு, இருமொழி, பன்மொழி அகராதிகளைப் படைத்தனர். அந்த அகராதிகள் அவர்கள் நம்மொழியைப் புரிந்துகொள்ளவும், நாம் அவர்கள் மொழியைப் புரிந்துகொள்ளவும் தொடக்கத்தில் பயன்பட்டன; அவையே இன்றும் பயன்படுகின்றன.

1679இல் ஆந்தம் தெப்ரோயன்சா என்பவர் தமிழ் - போர்ச்சுக்கீசிய அகராதியை இயற்றினார். ஃபாபிரிசியஸ், தமிழ் - ஆங்கில அகராதியையும், இராட்லர், தமிழ்- ஆங்கில அகராதியையும், வின்சுலோ, ஆங்கிலம் - தமிழ், தமிழ்-ஆங்கில அகராதிகளையும் இயற்றினார்கள். பிற்காலத்தில் தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லாலும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச்சொல்லாலும் பொருள் சொல்லும் அகராதிகள் பல படைக்கப்பட்டதற்கு மேற்கூறிய அகராதிகளே அடிப்படையாக அமைந்தன.

இத்தாலி நாட்டைச் சார்ந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்னும் இயற்பெரைக் கொண்ட வீரமாமுனிவர் 1732 இல் பெயர், பொருள், தொடை, தொகை என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய சதுரகராதியை இயற்றினார். இந்த அகராதிதான் தற்போதுள்ளவாறு அகரவரிசையில் தமிழ்ச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லாலேயே பொருள் கூறும் அகராதிகள் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது. அதன் காரணமாகத்தான் வீரமாமுனிவர் "தமிழ் அகராதியியலின் தந்தை" என்று போற்றப்படுகின்றார்.

அகராதியின் தேவை

அகராதி என்பது சொல்லுக்குப் பொருள் சொல்லும் நூல். தேவையான நேரங்களில் மட்டும் அதனை எடுத்துப் பொருள் தெரிந்துகொண்டால் போதும் என்ற தவறான எண்ணம் இன்று நம்மிடையே பலருக்கும் இருக்கின்றது. சொற்கள் இல்லாமல் மொழி இல்லை. எனவே மொழியைக் காக்க வேண்டும் என்றால் சொற்களைக் காக்க வேண்டும். அதற்கு அகராதிகள் தேவை.

தமிழ் நம் தாய்மொழி. அப்படியிருக்க தமிழ்-தமிழ் அகராதிகள் எதற்குத் தேவை என்பது பலரும் கேட்கும் கேள்வி. தமிழ்மொழியானது கல்வெட்டுக் காலம் தொடங்கி கணினிக்காலம் வரையிலான நீண்ட வரலாற்றைக் கொண்ட மொழி. சொல்வளம் நிறைந்த மொழி. எனவே தமிழின் சொல்வளத்தையும் பொருள் ஆழத்தையும் அறிந்துகொள்ள தமிழ் அகராதிகள் தேவை.

சான்றாக, சொல்லுதலின் வகையைக் குறிக்க தமிழில் ஏறத்தாழ முப்பத்தொன்பது சொற்கள் உள்ளன. அவை

சொல்சிறப்புப் பொருள்
1.அசைத்தல் அசையழுத்தத்துடன் சொல்லுதல். அசையழுத்தம் (accent)
2.அறைதல் அடித்து (வன்மையாய் மறுத்து)ச் சொல்லுதல்
3.இசைத்தல் ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல்
4.இயம்புதல் இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல்
5.உரைத்தல் அருஞ்சொற்களுக்கு அல்லது செய்யுள்களுக்குப் பொருள் சொல்லுதல்
6.உளறுதல் ஒன்றிருக்க ஒன்றைச் சொல்லுதல்
7.என்னுதல் என்று சொல்லுதல்
8.ஓதுதல் காதிற்குள் மெல்லச் சொல்லுதல்
9.கத்துதல் குரலெழுப்பிச் சொல்லுதல்
10.கரைதல் அழைத்துச் சொல்லுதல்
11.கழறுதல் கடிந்து சொல்லுதல்
12.கிளத்தல் இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லுதல்
13.கிளத்துதல் குடும்ப வரலாறு சொல்லுதல்
14.குயிலுதல், குயில்போல் இன்குரலிற் சொல்லுதல் குயிற்றுதல்
15.குழறுதல் நாத் தளர்ந்து சொல்லுதல்
16.கூறுதல் கூறுபடுத்திச் சொல்லுதல்
17.சாற்றுதல் பலரறியச் சொல்லுதல்
18.செப்புதல் வினாவிற்கு விடை சொல்லுதல்
19.நவிலுதல் நாவினால் ஒலித்துப் பயிலுதல்
20.நுதலுதல் ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்
21.நுவலுதல் நூலின் நுண்பொருள் சொல்லுதல்
22.நொடித்தல் கதை சொல்லுதல்
23.பகர்தல் பண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல்
24.பறைதல் மறை (இரகசியம்) வெளிப்படுத்திச் சொல்லுதல்
25.பன்னுதல் நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்
26.பனுவுதல் செய்யுளில் புகழ்ந்து சொல்லுதல்
27.புகலுதல் விரும்பிச் சொல்லுதல்
28.புலம்புதல் தனக்குத்தானே சொல்லுதல்
29.பேசுதல் ஒருமொழியிற் சொல்லுதல்
30.பொழிதல் இடைவிடாது சொல்லுதல்
31.மாறுதல் உரையாட்டில் மாறிச் சொல்லுதல்
32.மிழற்றுதல் மழலைபோல் இனிமையாகச் சொல்லுதல்
33.மொழிதல் சொற்களைத் தெளிவாகப் பலுக்கிச் சொல்லுதல்
34.வலத்தல் கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்
35.விடுதல் மெல்ல வெளிவிட்டுச் சொல்லுதல்
36.விதத்தல் சிறப்பாய் எடுத்துச் சொல்லுதல்
37.விள்ளுதல் வெளிவிட்டுச் சொல்லுதல்
38.விளத்துதல் (விவரித்துச்) சொல்லுதல்
39.விளம்புதல் ஓர்அறிவிப்பைச் சொல்லுதல்

இதுபோல் தமிழ்மொழியில் ஒரு பொருளுக்கு நுணுக்கம், பொருள் வேறுபாடு கருதி பல சொற்களும் உருவாகியிருக்கின்றன. இவற்றைத் தமிழ்மொழியைப் பயன்படுத்துவோர் அனைவரும் அறிந்திருக்க வழியில்லை. எனவே இதைப் பொதுவாக பதிவு செய்திருந்தால் மட்டுமே அனைவரும் பயன்படுத்த முடியும். இப்பொதுப் பதிவே அகராதி ஆகும். எனவே அகராதி முகாமையான ஒரு நூல் ஆகிறது. மொழி வளர்ச்சியடைய இதன் தேவையும் அதிகமாகிறது.

காலந்தோறும் சொற்களின் பொருள் மாற்றத்தை அறிந்துகொள்ளவும் அகராதிகள் தேவை. சான்றாக, சங்க இலக்கியங்களில் நாற்றம் என்ற சொல் 'நறுமணம்' என்ற பொருளிலேயே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று அச்சொல் 'தீமணம்' என்ற பொருளில் மட்டுமே சொல்லப்பட்டுவருகிறது. இதுபோன்ற சொல்பொருள் மாற்றங்களை உணர அகராதிகள் தேவை.

அகராதிகள் சொற்களின் பொருளை மட்டும் பதிவு செய்யாமல்,

1. சொற்களின் வகைப்பாடு
2. சொற்களின் பலுக்கல் (உச்சரிப்பு) முறை
3. தமிழில் காலந்தொறும் பொருள் மாறுபாடு
4. ஆங்கிலத்தில் இணையான பொருள்
5. இவற்றிற்கு மேற்கோள்கள்
6. (பிறமொழிகளில் )இனச்சொல்
7. சொற்பிறப்பியல்

எனப் பல கூறுகளையும் அகராதி உள்ளடக்கிப் பதிவு செய்கிறது.

சொற்களைப் பாதுகாக்கவும், அதன்மூலம் மொழியைப் பாதுகாக்கவும், தமிழின் சொல்வளம் அறியவும், மொழியின் சொல்லாழம் சொல்லவும், சொற்களின் பொருள் மாற்றத்தைப் புரிந்துகொள்ளவும், மொழியின் தொன்மையை உணர்த்தவும், அகராதிகள் காலந்தோறும் படைக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.

ஒவ்வொரு மொழியிலும் அகராதிகள் உருவாக்கப்பட்டு அம்மொழிகளைக் காத்து நிற்பது போல் அருந்தமிழையும் அகராதிகள் காக்கின்றன.

திட்டங்களும் செயற்பாடுகளும்
வெளியீடுகள்
1.செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி 31 தொகுதிகள்

1974-இல் தொடங்கி 2011 வரை வெளியிடப்பட்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலிகள் 13,327 பக்கங்களில் 31 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இவை தூயதமிழில் ஆங்கில விளக்கங்களுடன், தேவையான படங்களுடன் அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன.

2.செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி திருத்தியபதிப்பு - 7 தொகுதிகள்

இவ்வியக்ககத்தின் வெளியீடுகளை (31 தொகுதி 13,327 பக்கங்கள்) காலமேம்படுத்தம் (Update) செய்து திருத்திய பதிப்பாக 7 தொகுதிகளில் வானவில் வண்ணத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தூயதமிழ்ச்சொற்களைத் தேர்ந்தெடுத்து, சொல் பலுக்கல் (உச்சரிப்பு), இலக்கணக்குறிப்பு, பொருள், ஆங்கில விளக்கம், வேர்ச்சொல் என அனைத்துக் குறிப்புகளுடன் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

3.செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி சுருக்கப்பதிப்பு

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலிகளின் 31 மடலங்களையும் தனியொருவர் வாங்க இயலாது என்பதையும், அப்படியே வாங்கினாலும் அவற்றையெல்லாம் அவர் இல்லத்தில் வைத்துக்கொள்ள இயலாது என்பதையும் கருத்தில் கொண்டு அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அந்த 31 மடலங்களிலிருந்தும் தெரிந்தெடுக்கப்பட்ட, முகாமையான, புழக்கத்தில் உள்ள சொற்களை மட்டும் தொகுத்து ஒரே மடலமாக 884 பக்கங்களில், சுருக்கப்பதிப்பு ஒரே தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளது.

4. வினைச்சொல் அகரமுதலி

செந்தமிழில் உள்ள முகாமையான வினைச்சொற்களை ஒன்றுதிரட்டி, சொல் பலுக்கல், இலக்கணக்குறிப்பு, பொருள்கள், ஆங்கில விளக்கம், எடுத்துக்காட்டுகள், தமிழ்க் கிளைமொழிகளில் உள்ள வழக்கு என அனைத்து வகைக்குறிப்புகளுடன் இந்நூல் 408 பக்கங்கள் கொண்ட ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

5.வேர்ச்சொல் சுவடி

புதிய கலைச்சொற்களை உருவாக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவும் வகையிலும், அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்ப்பாடத் தேர்வர்களுக்கும் பயன்படும் நோக்கிலும் தமிழ்வேர்ச்சொற்களைத் தொகுத்து ‘வேர்ச்சொல் சுவடி’ என்னும் நூல் 5000 படிகள் அச்சிடப்பட்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் பள்ளிக்கு ஒரு படியெனப் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் வழியே வழங்கப்பட்டன.

6. நற்றமிழ் அறிவோம் (எ) தூயதமிழ் அகராதி

தொடக்கப்பள்ளிக் குழந்தைகள் தங்கள் இல்லத்திலுள்ள பொருள்களைத் தூய தமிழில் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்ச்சொற்களைத் தொகுத்து வண்ணப்படங்களுடன் நற்றமிழ் அறிவோம் (எ) தூய தமிழகராதி 50,000 படிகள் அச்சிட்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்துத் தொடக்கப்பள்ளிகளுக்கும் பள்ளிக்கு ஒரு படியெனப் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் வழியே வழங்கப்பட்டன.

7.நடைமுறைத் தமிழ் அகரமுதலி

வாழ்வியல் நடைமுறையில் பெருமளவில் பயன்படுத்தப்படும் தமிழ்ச்சொற்களை எல்லாம் ஒருங்கே தொகுத்து அனைவருக்கும் பயன்படும் முறையில் இந்த அகரமுதலி உருவாக்கப்பட்டுள்ளது.

8.மாணவர் இலக்கியத் தமிழ் அகரமுதலி

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் தமிழ் இலக்கியங்களில் உள்ள பழந்தமிழ்ச் சொற்களைப் பிறர் உதவியின்றித் தாங்களே படித்துப் புரிந்து நன்கு உள்விளங்கிக் கொள்ளும் வகையில் இந்த அகரமுதலி தொகுக்கப்பட்டுள்ளது.

9.அயற்சொல் அகராதி

நல்ல தமிழ்ச்சொற்கள் இருக்கையில், தேவையின்றிப் பிறமொழிச் சொற்களை வலிந்து பேசிய சிலரால் பல அயற்சொற்கள் மக்களைத் தொற்றிக் கொண்டுள்ளன. இவற்றைக் களையும் வகையிலும் அயற்சொற்களுக்கான அழகு தமிழ்ச்சொற்களை நினைவூட்டும் வகையிலும் இந்த அயற்சொல் அகராதி உருவாக்கப்பட்டுள்ளது.

10.மயங்கொலிச்சொல் அகராதி

தமிழ்மொழியில் உள்ள மாற்றொலியன் எழுத்துகள் (ண, ந, ன, ர, ற, ல, ள, ழ) தவறான பயன்பாட்டில் பொருள் மாற்றம் பெற்றுவிடுகின்றன. எனவே அவற்றைத் தெளிவிக்கும் வகையில், தமிழிலுள்ள மயங்கொலிச் சொற்களைத் திரட்டி, அவற்றிற்கான பொருள் விளக்கங்களைத் தெளிவிக்கும் வகையில் இந்த அகராதி உருவாக்கப்பட்டுவருகிறது.

11.பையடக்க அகராதி

அனைத்துப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு உடன்கணிப்பேடு (Ready Reckoner) போலப் பயன்படும் வகையில் இவ்வகராதி தேவையான சொற்களை எல்லாம் ஒருங்குதிரட்டி பையடக்க அகராதி உருவாக்கப்படுகிறது.

12.ஒருபொருட் பன்மொழி அகராதி

தமிழ்மொழியில் ஒரு பொருளைக் குறிப்பதற்குப் பல சொற்கள் அதன் நுணுக்க வேறுபாடுகளைக் கொண்டு அமைந்துள்ளன. இலக்கியங்களிலும், வாழ்முறை, நடைமுறையிலும் அவை அமைந்துள்ளன. அவற்றைத் தொகுத்து இந்த அகராதி உருவாக்கப்படவுள்ளது.

13. தமிழர் வாழ்முறைப் பண்பாட்டு அகராதி

தமிழரின் மரபில் பண்டைக் காலத்திலிருந்து இன்றுவரை வாழ்முறையில் பல சொற்களும், பண்பாடு, நாகரிகம் சார்ந்து பல சொற்களும் உருவாகியுள்ளன. அவற்றைத் தொகுத்து அச்சொற்களுக்குப் பொருள் எழுதி அகரவரிசைப்படுத்தி இந்த அகராதி உருவாக்கப்படவுள்ளது.

14. வட்டார வழக்குச் சொற்பொருளகராதி

தமிழ்மொழி பேசும் பரப்பு விரிந்து உலகெங்கணும் பரவியுள்ளது. ஒரு கருத்திற்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் வெவ்வேறு சொற்கள் பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு வட்டாரத்தில் பேசும் சொற்கள் மற்ற வட்டார மக்களுக்குப் புரிவதில்லை. எனவே தமிழில் வழங்கும் வட்டாரச்சொற்களைத் தொகுத்து அனைவருக்கும் புரியும் வண்ணம் பொதுத் தமிழில் பொருள் எழுதி வட்டார வழக்குச் சொற்பொருளகராதியாக உருவாக்கப்படவுள்ளது.

திட்டங்கள்
15.தமிழ்க் கலைக்கழகம்

நாள்தோறும் பல்துறைச் சொற்கள் பெருகிவரும் இன்றைய காலக்கட்டத்தில் பிறமொழிச் சொற்களைத் தொகுத்து அவற்றிற்கான தமிழ்க் கலைச்சொற்களைத் துறை வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கிச் செம்மைப்படுத்தி அரசின் இசைவு பெற்று வெளியிட்டு வருகிறது.

திங்களுக்கு இரண்டு வல்லுநர்குழுக் கூட்டங்கள் நடத்தி ஆயிரம் கலைச் சொற்களை வடிவமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

16. ‘சொற்குவை’ வலைத்தளம்

sorkuvai.com என்ற வலைத்தளம் தொடங்கப்பெற்று அதில் தமிழிலுள்ள சொற்கள், அவற்றின் பிறப்பு, வேர்ச்சொல், இலக்கிய மேற்கோளுடன் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், அதில் இயக்கக வரலாறு, சொல்வயல் மின்னிதழ், காட்சியகம், விருதுகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

17.சொல் வயல் மின்னிதழ்

திங்கள்தோறும் சொல்லாய்வு, சொல்லாக்கம், அகராதியியல், மொழியியல் சார்ந்த செய்திகளைத் தாங்கி, சொல்வயல் மின்னிதழ் (e-magazine) சொற்குவை வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுவருகிறது.

18.அகராதியியல் விழிப்புணர்வுத் திட்டம்

கல்லூரி மாணவர்களிடையே தூயதமிழ்ப் பயன்பாட்டையும், புதிய கலைச்சொல் உருவாக்கத்திறனையும் ஊக்குவிக்கும் வகையில் கல்லூரிகளில் அகராதியியல் விழிப்புணர்வுத் திட்டம் இவ்வியக்ககத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

19.கட்டணமில்லா அழை மையம் (Toll Free Call Centre)

இவ்வியக்ககத்தில் செயல்பட்டுவரும் சொற்குவையின் கட்டணமில்லா அழை மையத்தின் 14469 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தமிழ்ச் சொற்கள் குறித்த ஐயங்களைக் கேட்டு உரிய விளக்கம் பெறலாம். மேலும், தமிழ்ச் சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களையும், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

20.சொற்குவை மாணவத் தூதுவர் பயிற்சித்திட்டம்

அகராதியியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தின் அடுத்த கட்டமாக மாணவர்களிடையே சொல்லாக்கத் திறனை வளர்த்தெடுத்து, அவர்களின் தனித்தமிழ்ப் பற்றினை ஊக்குவித்து மேம்படுத்தும் நோக்கில் ‘சொற்குவை மாணவத் தூதுவர் பயிற்சித் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படுகிறது. தொடர்செலவினமான சொற்குவை மாணவத் தூதுவர் பயிற்சித் திட்டத்தின்கீழ் மாவட்டந்தோறும் கல்லூரிகளிலிருந்தும் கல்லூரிக்கு 10 மாணவர்கள் வீதம் மொத்தம் 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பெற்று, 50 மாணவர்கள் என்ற வகையில் 4 குழுக்குள் பிரிக்கப்பட்டு, ஒரு குழுவினருக்கு ஒருநாள் என்ற வகையில் 4 நாள்கள் பயிற்சியளிக்கப்படவுள்ளது. இன்றைய காலத்தில் நாள்தோறும் பெருகிவரும் பலதுறை சார்ந்த சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்குவது குறித்து தேர்ந்த அறிஞர்களைக் கொண்டு பயிற்சியளித்து, ‘சொற்குவை மாணவத் தூதுவர்’ என்ற அரசு சான்றிதழும் வழங்கப்படுகிறது.

21. வல்லுநர்குழுக் கூட்டம்

தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தின்போது துறை சார்ந்த வல்லுநர்களின் உதவி இருந்தால்தான் சரியான, பொருத்தமான, ஏற்புடைய சொற்களை உருவாக்க முடியும். துறைசார்ந்தவர்களுக்கே அந்தந்தத் துறைகளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்களும், தமிழாக்கம் செய்யப்பட வேண்டிய சொற்களும் நன்கு தெரியும் என்பதால், அத்தகையவர்களின் உதவியோடு அச்சொற்களையெல்லாம் தொகுத்து, தமிழில் கலைச்சொல்லாக்கம் செய்து தமிழின் சொல்வளத்தைப் பெருக்குவதற்குத் துறை சார்ந்த வல்லுநர்குழுக் கூட்டம் இன்றியமையாததாகிறது. எனவே, சொற்குவைச் செயற்பாட்டின்கீழ் துறைவாரியாக வல்லுநர் குழுக்கூட்டம் நடத்திப் பலதுறை சார்ந்த கலைச்சொற்களைத் தொகுத்துச் சொற்குவையில் சேர்ப்பதற்கு ஏதுவாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என்ற வகையில் ஆண்டுக்கு நான்குமுறை துறைசார் வல்லுநர் குழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளன.

22. தமிழ் அகராதியியல் நாள் விழா

தமிழ் அகராதியியல் அமைப்பு முறைக்கு முன்னோடியாக விளங்கிடும் வீரமாமுனிவரின் தமிழ்த்தொண்டைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 8ஆம் நாளைத் ‘தமிழ் அகராதியியல் நாளாகக்’ கொண்டாடுவதுடன், இரண்டு நாள்கள் பன்னாட்டுக் கருத்தரங்கமும் நடத்த தொடர் செலவினமாக ஆண்டுக்கு ரூ.10 இலட்சம் ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிட்டுள்ளது. இவ்விழாவில், தூயதமிழிலேயே பேசுகின்ற மூவருக்குத் தூயதமிழ்ப்பற்றாளர் சான்றிதழும் தலா ஐந்தாயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான சொல்லாக்கம் மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு இரண்டு போட்டிகளிலும் முறையே முதல் பரிசாக ரூ.10,000/- மும், இரண்டாம் பரிசாக ரூ.5,000/- மும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கிய ‘அகராதி ஆய்வு மலர்’ வெளியிடப்படுகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் வீரமாமுனிவர் விருது-1, தேவநேயப் பாவாணர் விருது -1, நற்றமிழ்ப் பாவலர் விருது -2, தூயதமிழ் ஊடக விருது -2, தூயதமிழ்ப் பற்றாளர் விருது -37, சொல்லின்தாய் விருது-37 ஆகிய 80 விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

தமிழ் அகராதி நாள் விருதுகள்
23. வீரமாமுனிவர் விருது

தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத, பிறப்பால் வெளிநாட்டைச் சார்ந்த, அகராதித் துறையில் சிறந்து விளங்கும் தகுதி வாய்ந்த அறிஞர் ஒருவருக்கு ‘வீரமாமுனிவர் விருது’ தமிழ்நாடு அரசால் தமிழ் அகராதியியல் நாள் விழாவில் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படவுள்ள இவ்விருதினைப் பெறுவோருக்கு உரூபா ஒரு இலக்கமும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.

24. தேவநேயப் பாவாணர் விருது

அகராதித்துறையில் சிறந்து விளங்கும் தகுதி வாய்ந்த உள்நாட்டு அறிஞர் ஒருவருக்குத் ‘தேவநேயப் பாவாணர் விருது’ தமிழ்நாடு அரசால் தமிழ் அகராதியியல் நாள் விழாவில் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படவுள்ள இவ்விருதினைப் பெறுவோருக்கு உரூபா ஒரு இலக்கமும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது 25. தூயதமிழ்ப் பற்றாளர் விருது

நடைமுறை வாழ்க்கையில் இயல்பாகவே தூயதமிழில் பேசும் தகுதி மிக்கோரிலிருந்து ஆண்டுதோறும் மாவட்டத்துக்கு ஒருவர் என்ற வகையில் 37 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருதும்’ உரூபா 20,000/- பரிசுத்தொகையும், சான்றிதழும் அரசால் வழங்கப்படுகிறது.

26. நற்றமிழ்ப் பாவலர் விருது

பிறமொழிச் சொற்கள் கலப்பின்றித் தூயதமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்திப் பாக்களை இயற்றும் மரபுக்கவிஞர், புதுக்கவிஞர்களிலிருந்து ஆண்டுதோறும் முறையே ஒவ்வொருவரைத் தேர்வுசெய்து ‘நற்றமிழ்ப் பாவலர் விருதும்’ ஒவ்வொருவருக்கும் உரூபா 50,000/- பரிசுத்தொகையும், தங்கப்பதக்கத்தோடு தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

27. தூயதமிழ் ஊடக விருது

தூய தமிழ்ச்சொற்களையும், காலத்திற்கேற்ற புதிய கலைச்சொற்களையும் பயன்படுத்தி மக்களுக்குச் செய்திகளை வழங்கும் ஓர் அச்சு ஊடகத்தையும், ஒரு காட்சி ஊடகத்தையும் இவ்வியக்ககத்தின் வழியாகத் தேர்வுசெய்து, தமிழ் ‘அகராதியியல் நாள்’ விழாவின்பொழுது ‘தூயதமிழ் ஊடக விருதும்’, ஒவ்வொரு ஊடகத்திற்கும் உரூபா 50,000/- பரிசுத்தொகையும், தங்கப்பதக்கத்தோடு தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

28. சொல்லின் தாய் விருது

கல்லூரி மாணவர்களிடையே காணப்படும் சொல்படைக்கும் திறனை ஊக்கப்படுத்தவும், காலத்திற்கேற்பப் புதிய சொற்களை உருவாக்கிப் புழக்கத்திற்குக் கொண்டு வருவதற்காகவும், தமிழின் சொல்வளத்தைப் பெருக்குவதற்காகவும் இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

மாவட்டத்திற்கு ஒரு மாணவர் வீதம் 37 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ‘சொல்லின் தாய்’ விருதுக்கான தகுதியுரை மற்றும் விருதுத் தொகையாக ஒருவருக்கு உரூபா 10,000/- வழங்கப்படுகிறது.

29. தூய தமிழில் பேசுவோருக்குப் பரிசு

நடைமுறை வாழ்க்கையிலும் தூய தமிழிலேயே பேசுவோரில் தகுதி வாய்ந்த

3 தூயதமிழ்ப் பற்றாளர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் உரூபா 5000/- பரிசுத்தொகையும், சான்றிதழும் ஒவ்வோராண்டும் தமிழ்நாடு அரசால் தமிழ் அகராதியியல் நாள் விழாவின்போது வழங்கப்படுகிறது.

30. மாணவர்களுக்கான கலைச்சொல் மற்றும் ஓவியப்போட்டி

தமிழ் அகராதியியல் நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் கலைச்சொல்லாக்கப் போட்டியும், அகராதியியல் தொடர்பான பொருண்மையியல் சொல்-பொருள்-படம் என்ற வகையில் ஓவியப்போட்டியும் நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதற்பரிசாக உரூபா பத்தாயிரம் (உரூ.10,000/-), இரண்டாம் பரிசாக உரூபா ஐந்தாயிரம் (உரூ.5,000/-) மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

கல்லூரிகள்தோறும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் பயிலரங்கம் - வல்லுநர்க்குழுக் கூட்டம் அகராதியியல்நாள் விழா
கல்லூரியின் பெயர்
17.12.2018 இலயோலாக் கல்லூரி-சென்னை
25.02.2018 அண்ணா நூற்றாண்டு நூலகம். சென்னை
28.02.2019 மாநிலக் கல்லூரி. சென்னை
18.03.2019 தமிழ்ப் பல்கலைக்கழகம். தஞ்சாவூர்
25.03.2019 தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை
19.07.2019 குரு ஸ்ரீ சாந்திவிஜய் செயின் மகளிர் கல்லூரி ,சென்னை
07.08.2019 செல்லம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை
22.08.2019 இசுலாமியக், வாணியம்பாடி
29.08.2019 எத்திராசு மகளிர் கல்லூரி,சென்னை
13.09.2019 அ.வ.அ. (A.V.C.) கல்லூரி, மயிலாடுதுறை
13.09.2019 தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) மயிலாடுதுறை
16.09.2019 பலதுறை தொழில்நுட்பக் கல்லூரி, வலங்கைமான் .திருவாரூர்
17.09.2019 அரசினர் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) ,கும்பகோணம்
18.09.2019 மன்னர் சரபோஜி அரசு ,தஞ்சாவூர்
08.11.2019 அகராதியியல்நாள் தொடக்க விழா- சென்னை
31.12.2019 தேசிய சித்த மருத்துவ நிறுவனம் ,சென்னை
11.03.2020 அகராதியியல்நாள் நிறைவு , சென்னை
12.02.2021 தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி,தருமபுரம்
தமிழ் அகராதியியல் நாள் விருதுகள்
1. வீரமாமுனிவர் விருது 1
2. தேவநேயப் பாவாணர் விருது 1
3. தூயதமிழ்ப் பற்றாளர் விருது மாவட்டத்திற்கு ஒருவர் 37
4. நற்றமிழ்ப் பாவலர் விருது 2 (மரபுக்கவிதை, புதுக்கவிதை)
5. தூயதமிழ் ஊடக விருது 2(காட்சி ஊடகம், அச்சு ஊடகம்)
6. சொல்லின் தாய் விருது 37 (மாவட்டத்திற்கு ஒரு மாணவர்)
7. தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு 3
6 விருதுகள்-80 பேருக்கு
3 பரிசுகள் - 3 பேருக்கு
இயக்கப் பணியாளர்கள்
சொற்குவை
சொற்குவை
சொற்குவை
சொற்குவை
சொற்குவை
சொற்குவை
சொற்குவை
சொற்குவை
சொற்குவை
சொற்குவை
சொற்குவை
சொற்குவை
சொற்குவை
சொற்குவை
சொற்குவை
சொற்குவை
சொற்குவை
இயக்குநர்கள் பட்டியல்
திருமதி க.பவானி
இயக்குநர்
01.03.2024 - இதுநாள் வரை
முனைவர் கோ.விசயராகவன்
இயக்குநர்
23.08.2021 - 29-02-2024
திரு.த.காமராசு
இயக்குநர்
24.05.2018 - 22.08.2021
முனைவர் கோ.செழியன்
இயக்குநர்
01.10.2011 - 11.06.2016
முனைவர் கோ.செழியன்
இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
13.06.2016 - 10.06.2016
முனைவர் கா.மு.சேகர்
இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
01.10.2011 - 11.06.2016
திரு.கூ.வ.எழிலரசு
இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
02.09.2011 - 30.09.2011
முனைவர் இரா.மதிவாணன்
மதிப்புறு இயக்குநர்
02.09.2008 - 01.09.2011
திரு வை.கண்ணபுரக் கண்ணன்
இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
17.06.2008 - 01.09.2008
முனைவர் ம.இராசேந்திரன்
இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
04.06.2008 - 16.06.2008
திரு கோ.சந்தானம் இ.ஆ.ப.
இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
16.11.2007 - 03.06.2008
திரு து.இராசேந்திரன் இ.ஆ.ப.
இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
04.01.2007 - 15.11.2007
திரு இரா.கற்பூரசுந்தரபாண்டியன் இ.ஆ.ப.
இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
22.05.2006 - 03.01.2007
முனைவர் பு.ஏ.இராமையா இ.ஆ.ப.
இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
22.06.2005 - 21.05.2006
திரு தா.சந்திரசேகரன் இ.ஆ.ப.
இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
17.07.2001 - 21.06.2005
முனைவர் பு.ஏ.இராமையா இ.ஆ.ப.
இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
29.06.2001 - 16.07.2001
திரு சு.இராமகிருஷ்ணன் இ.ஆ.ப.
இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
05.07.1999 - 28.06.2001
திரு த.ரா.சீனிவாசன் இ.ஆ.ப.
இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
25.11.1997 - 04.07.1999
திரு வை.பழனிச்சாமி இ.ஆ.ப.
இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
01.02.1996 - 24.11.1997
திரு இரா.கிறித்துதாசு காந்தி இ.ஆ.ப.
இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
22.11.1995 - 31.01.1996
திரு முத்துபிச்சை
இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
01.07.1994 - 21.11.1995
முனைவர் இரா. மதிவாணன்
முதன்மைப் பதிப்பாசிரியர் - இயக்குநர்
19.06.1989 - 30.06.1994
இவ்வியக்ககம் தமிழ்வளர்ச்சி இயக்ககத்துடன் இணைக்கப்பட்டது
09.05.1988 - 18.06.1989
திரு இரா. மதிவாணன்
இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
28.01.1981 - 08.05.1988
“மொழி ஞாயிறு”
ஞா.தேவநேயப் பாவாணர்
இயக்குநர்
08.05.1974 - 16.01.1981